தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சுமார் 13 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வர் என எதிர்பார்ப்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திருமதி நவோமி ஜயவர்தன தெரிவித்துள்ளார்
.புகையிரத திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை ஆகியன இணைந்து பயணிகளுக்கான போக்குவரத்து திட்டத்தை தயாரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இதன்படி கொழும்பில் இருந்து புத்தளம், தம்புள்ளை, கண்டி, காலி, ஹைலெவல் ஆகிய ஐந்து பிரதான பாதைகளில் பயணிக்கும் பஸ்களின் எண்ணிக்கை 700 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மகும்புர, கடவத்தை, மத்திய பேருந்து நிலையம், பஸ்டியன் மாவத்தை, ஹைலெவல் வீதியில் இருந்து பயணிக்கும் பேருந்துகளின் எண்ணிக்கை வழமையை விட அதிகரிக்கப்பட்டுள்ளது.
பஸ்தியன் மாவத்தை பஸ் நிலையத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள், பாலூட்டும் தாய்மார்கள் உள்ளிட்ட பயணிகளின் வசதிக்காக நீர் மற்றும் முதலுதவி வழங்கும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.இந்த சேவைகளை பெறுவதில் உள்ள சிரமங்கள் குறித்து 0712595555 என்ற இலக்கத்திற்கு பயணிகள் WhatsApp செய்திகள் மூலம் முறைப்பாடு செய்ய முடியும்.மேலும், இந்த சேவைகள் தொடர்பான தகவல்களை ரயில்வே-1971, போக்குவரத்து ஆணைக்குழு-1955, இ.போ.ச-1958 என்ற துரித எண்கள் மூலம் பெற முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 10, 11, 12, 14, 15 ஆகிய திகதிகளில் விசேட புகையிரத திட்டத்தின் கீழ் கொழும்பு கோட்டையிலிருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும் புகையிரதம் மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு பதுளையையும் அதே நாட்களில் மாலை 5.20 மணிக்கு பதுளையிலிருந்து புறப்படும் புகையிரதம் மறுநாள் அதிகாலை 3.52 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.
கடலோர ரயில் பாதையில் 11, 12, 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில், மருதானையில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 7.30 மணிக்கு பெலியத்தவை சென்றடைகிறது.இதேவேளை, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை கொழும்பு கோட்டையில் இருந்து காலி வரையான விசேட புகையிரதமொன்று இரவு 7.25க்கு புறப்பட்டு இரவு 9.33க்கு சென்றடையவுள்ளது.
மற்றுமொரு புகையிரதம் மருதானையிலிருந்து பிற்பகல் 1.20 மணிக்குப் புறப்பட்டு 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் பிற்பகல் 3.50 மணிக்கு காலியைச் சென்றடையும்.11, 12, 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மாத்தறையில் இருந்து பெலியத்த வரையிலான ரயில் மாலை 6.55 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு பெலியத்தவை சென்றடையவுள்ளது.அதே நாட்களில் பெலியத்தவிலிருந்து இரவு 7.00 மணிக்குப் பயணிக்கத் தொடங்கும் ரயில் இரவு 7.31 மணிக்கு மாத்தறையை சென்றடையும்.
அதேபோன்று 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் பெலியத்தவிலிருந்து காலை 8.10 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் புகையிரதம் மதியம் 12.19 மணிக்கு மருதானையை சென்றடையவுள்ளது.11 மற்றும் 15 ஆம் திகதிகளில் காலியில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில் காலை 8.23 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையவுள்ளது.