நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ சென்மேரீஸ் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள், நேற்று மாலை பெய்த கடும் மழை காரணமாக, பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் ஏ.வேலுசாமி தெரிவித்துள்ளார்.
கல்லூரிக்கு அருகாமையில் உள்ள ஆறு ஒன்று பெருக்கெடுத்ததன் காரணமாக, கல்லூரியின் மண்டபங்களுக்குள் வெள்ள நீர் உட்புகுந்தமையால் இன்று காலை மாணவர்கள் கல்லூரிக்கு வருகை தந்த போதிலும் கற்றல் நடவடிக்கையினை மேற்கொள்ள முடியாமல்போயுள்ளதாக அதிபர் தெரிவித்தார்.
காலை பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்கள், சேறும் சகதியுமாக காணப்பட்ட அனைத்து வகுப்பறைகளையும் சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதேவேளை கல்லூரியின் அருகாமையில் காணப்படும் ஆற்றினை அகலப்படுத்தித் தருமாறு மாணவர்கள், கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டுமெனவும் தெரிவித்தனர்.