வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள தேசியப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக அவரது இல்லத்திற்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நேற்று சென்றிருந்தார்.
இதன்போதே இரா.சம்பந்தன், இவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரம் உட்பட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இதன்போது எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் ஜனாதிபதி ரணிலின் முயற்சிகளுக்கு ஆதரவு தருமாறு சம்பந்தன் மகிந்தவிடம் கோரியிருந்தார். இதன்போது வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல்களை நடத்தி, சுமுகமான தீர்வை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ, இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார். மேலும் தமிழர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று நாள் சர்வகட்சி மாநாட்டில், தமது கட்சியான பொதுஜன பெரமுனவும் கலந்துகொள்ளும் என மஹிந்த ராஜபக்ஷ இதன்போது உறுதியளித்துள்ளார்.