மியன்மார் இராணுவ தளபதி மின் ஆங் ஹ்லைங்கிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் கோரப்பட்டுள்ளது. ரோஹிங்யா இனத்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் கரீம் கான் தெரிவித்துள்ளார். அதற்கு போதிய ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2017ஆம் ஆண்டு பர்மிய இராணுவத்தினரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இனப்படுகொலையை அடுத்து இலட்சக்கணக்கான ரோஹிங்யா இனத்தவர்கள் மியன்மாரை விட்டு வெளியேறியிருந்தனர். அப்போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டு 1 மாதத்துக்குள் 730 சிறுவர்கள் உட்பட 6,700 ரோஹிங்யா இனத்தவர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் மியன்மார் இராணுவத்தினர், ரோஹிங்யா இன பெண்கள் மற்றும் சிறுமிகளைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகச் சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் மியன்மார் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் கையெழுத்திடாத காரணத்தினால் அந்த நாட்டு இராணுவத்தினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதில் சாத்தியமற்ற நிலைமை காணப்பட்டது.
எனினும் ரோஹிங்யா இனத்தவர்கள் ஏதிலிகளாக தஞ்சமடைந்த பங்களாதேஷ்இ சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டுள்ளதன் அடிப்படையில் மியன்மார் இராணுவத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் மியன்மார் இராணுவ தலைவருக்கு எதிரான பிடியாணையைக் கோருவதற்கான ஆதாரங்கள் உள்ளதாகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அத்துடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் மியன்மார் இராணுவத்துக்கு எதிராக இனப்படுகொலை விசாரணையும் இடம்பெற்று வருகின்றன.