இலங்கையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தம்மிக்க நிரோசன சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தம்மிக்க நிரோசன கடந்த 16 ஆம் திகதி அம்பலாங்கொட கந்தெவத்தை பகுதியில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய சந்தேக நபரொருவர் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காலி பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய மற்றுமொரு சந்தேக நபரொருவர் நேற்று (19) கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், காலி பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபருடன் தொடர்புகளை பேணியதாக கூறப்படும் கொஸ்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரும் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்காக இரண்டு தடவைகள் பணம் அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.