ரஷ்யாவுக்குச் சொந்தமான மேலும் ஒரு போர்க் கப்பலை கருங்கடல் பகுதியில் தாக்கி மூழ்கடித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு இராணுவ உளவுத் துறை நேற்று(05) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான ரோந்துக் கப்பல் செர்கேய் கோடோவ் உக்ரைன் சிறப்புப் படையினரால் திங்கட்கிழமை நள்ளிரவு தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. வெடிபொருள்கள் நிரப்பட்ட, ஆளில்லாத மகுரா வி5 படகுகள் மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
கருங்கடலில் கெர்ச் நீரிணைக்கு அருகே செர்கேய் கோடோவ் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இதனை ரஷ்யா இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
ஏற்கெனவே, ரஷ்யாவுக்குச் சொந்தமான படைக் கப்பல் சீசர் குனிகோவை தாக்கி மூழ்கடித்ததாகவும், இந்தத் தாக்குதலுக்கும் மகுரா வி5 ரக கடல் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் உக்ரைன் கடந்த மாதம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.