லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாடரங்கில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான ஐபிஎல் போட்டியில் 12 ஓட்டங்களால் சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றியீட்டியது.
இரண்டு அணிகளும் அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட அப் போட்டியில் வைட்களும் நோபோல்களும் லக்னோவுக்கு திருப்புமுனையாக அமைந்துவிடுமோ என்ற அச்சம் கடைசிக் கட்டத்தில் எழத் தொடங்கியது.
17ஆவது ஓவரில் தீப்பக் சஹார் 3 வைட்களையும் 19ஆவது ஓவரில் ஹங்கர்கேக்கர் 3 வைட்களையும் கடைசி ஓவரில் கௌதம் ஒரு வைடையும் ஒரு நோபோலையும் வீச சென்னை சுப்பர் கிங்ஸ் தோல்வி அடைந்துவிடுமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், வைட்கள், நோபோல் ஆகியவற்றுக்கு மத்தியிலும் அந்த மூவரும் கட்டுப்பாட்டுடன் பந்துவீசி தங்கள் அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.
எவ்வாறாயினும் சென்னை சுப்பர் கிங்ஸின் வெற்றியில் கய்க்வாட், கொன்வே ஆகியோரது சிறப்பான துடுப்பாட்டங்கள், மொயீன் அலியின் துல்லியமான பந்துவீச்சு என்பனவே பிரதான பங்காற்றியிருந்தன.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 217 ஓட்டங்களைக் குவித்தது.
இந்த வருட ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் அணி ஒன்றினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.
அத்துடன் இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் துடுப்பெடுத்தாட களம் புகுந்த அணித் தலைவர் மஹேந்த்ர சிங் தோனி ஐபிஎல் வரலாற்றில் 7ஆவது வீரராக 5000 ஓட்டங்கள் பட்டியலில் இணைந்தார். அவர் இதுவரை 236 போட்டிகளில் 5004 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
விராத் கோஹ்லி (224 போட்டிகளில் 6706 ஓட்டங்கள்), ஷிக்கர் தவான் (207 போட்டிகளில் 6284 ஓட்டங்கள்), டேவிட் வோர்னர் 5937 ஓட்டங்கள்), ரோஹித் ஷர்மா (228 போட்டிகளில் 5880 ஓட்டங்கள்), சுரேஷ் ரெய்னா (205 போட்டிகளில் 5528 ஓட்டங்கள்), ஏ.பி. டி வில்லியர்ஸ் (184 போட்டிகளில் 5162 ஓட்டங்கள்) ஆகியோரே 5000 ஓட்டங்களைக் கடந்த மற்றைய 6 வீரர்களாவர்.
ருத்துராஜ் கய்க்வாட், டெவன் கொன்வே ஆகிய இருவரும் மிக அற்புதமாகத் துடுப்பெடுத்தாடி 55 பந்துகளில் 110 ஓட்டங்களை அதிரடியாகப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஆனால், இருவரும் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.
ருத்துராஜ் கய்க்வாட் 31 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகளுடன் 57 ஓட்டங்களையும் டெவன் கோன்வே 29 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 47 ஓட்டங்களையும் விளாசினர்.
ஷிவம் டுபே (27), மொயீன் அலி (18) ஆகியோரும் தம்மாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர். (166 – 4 விக்.)
பென் ஸ்டோக்ஸ் (8), ரவிந்த்ர ஜடேஜா (3) ஆகிய இருவரும் தடுமாற்றத்திற்கு மத்தியில் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். (203 – 6 விக்.)
கடைசி ஓவரில் களம் நுழைந்த அணித் தலைவர் எம்.எஸ். தோனி 2 பந்துகளில் 12 ஓட்டங்களைக் குவித்து 7ஆவதாக ஆட்டமிழந்தபோது மொத்த எண்ணிக்கை 215 ஓட்டங்களாக இருந்தது.
கடைசி 2 பந்துகளில் 2 ஓட்டங்கள் மாத்திரமே பெறப்பட்டது.
அம்பாட்டி ராயுடு ஆட்டம் இழக்காமல் 27 ஓட்டங்களைப் பெற்றார்.
லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மார்க் வூட் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
218 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்று 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
அணித் தலைவர் கே.எல். ராகுல், கய்ல் மேயர்ஸ் ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 33 பந்துகளில் 79 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
கய்ல் மேயர்ஸ் 22 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 53 ஓட்டங்களைக் குவித்து முதலாவதாக ஆட்டமிழந்தார்.
ஆனால், அதன் பின்னர் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் சீரான இடைவெளியில் மேலும் 5 விக்கெட்களை இழந்தது.
கே.எல். ராகுல் (20), தீப்பக் ஹூடா (2), க்ருணல் பாண்டியா (9), அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் (18), நிக்கலஸ் பூரண் (18 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 32) ஆகிய ஐவர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். (16 ஓவர்களில் 156 – 6 விக்.)
ஆனால், இம்ப்பெக்ட் துடுப்பாட்ட வீரர் அயுஷ் படோனியும் கிரிஷ்ணப்பா கௌதமும் 7ஆவது விக்கெட்டில் 21 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்து சென்னைக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். எனினும் அவர்களது அணியின் வெற்றி அருகில் வந்து விலகிச் சென்றுவிட்டது.
அயுஷ் படோனி 23 ஓட்டங்களையும் கிரிஷ்ணப்பா கௌதம் ஆட்டமிழக்காமல் 17 ஓட்டங்களையும் மார்க் வூட் ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.
சென்னை பந்துவீச்சில் மொயீன் அலி 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் இம்ப்பெக்ட் பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.