28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வறட்சியான காலநிலை காரணமாக இதுவரை 84 ஆயிரத்து 646 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இதுவரை 84 ஆயிரத்து 646 குடும்பங்களை சேர்ந்த 2 இலட்சத்து 91 ஆயிரத்து 720 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை வடக்கு, கிழக்கு, வடமேல், ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களைச் சேர்ந்த மக்களே வெப்பத்தினால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 23 ஆயிரத்து 688 குடும்பங்களைச் சேர்ந்த 75 ஆயிரத்து 607 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில், திருகோணமலை, மட்டகளப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 991 குடும்பங்களை சேர்ந்த 63 ஆயிரத்து 265 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடமேல் மாகாணத்தில், 7 ஆயிரத்து 143 குடும்பங்களை சேர்ந்த 20 ஆயிரத்து 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.

ஊவா மாகாணத்தின், மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்களை சேர்ந்த ஆறாயிரத்து 253 குடும்பங்களை சேர்ந்த 20 ஆயிரத்து 52 பேர் வறட்சியினார் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சப்ரகமுவ மாகாணத்தில் 13 ஆயிரத்து 705 குடும்பங்களை சேர்ந்த 49 ஆயிரத்து 697 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் மத்திய மாகாணத்தில், 9 ஆயிரத்து 697 குடும்பங்களை சேர்ந்த 32 ஆயிரத்து 695 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வறட்சியான காலநிலை காரணமாக பல காட்டுத் தீ சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

வெல்லவாய – செல்லபாவ பகுதியில் உள்ள வனப் பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் 20 ஏக்கருக்கும் அதிகமான வனப் பகுதி தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நிலவும் வெப்பமான காலநிலையில் சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சிறுவர் நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

வெப்பத்தை கருத்திற் கொண்டு சிறுவர்களுக்கு அதிக திரவ ஆகாரங்களை வழங்குதல் மற்றும் பொருத்தமான ஆடை அணிவித்தல் வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிக வெப்பம் நிலவக் கூடிய பகல் வேளையில் பொது வெளிகளில் சிறுவர்கள் விளையாடும் போது அதற்கு ஏற்ப செயற்பட வேண்டும் எனவும் சிறுவர் நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles