விஜய் ஹசாரே டிராபி போட்டியில் கர்நாடகாவுக்கு எதிரான இன்றைய 2வது அரைஇறுதி ஆட்டத்தில் மும்பை அணியின் கேப்டன் பிரித்வி ஷா (வயது 21) அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். வலது கை பேட்ஸ்மேனான ஷா, 79 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து விளையாடிய அவர் 165 (122 பந்துகள் 17 பவுண்டரி, 7 சிக்சர்) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து உள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி 183 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது சாதனையாக இருந்தது.
இதன்பின்னர் கடந்த 2012ம் ஆண்டில் டாக்காவில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 183 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற கோலி உதவினார்.
தோனி மற்றும் விராட் கோலி சாதனையை பிரித்வி ஷா சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே டிராபி போட்டியில் முறியடித்து மும்பை அணி அரையிறுதி செல்ல வழி ஏற்படுத்தினார். அவர் அதிரடியாக விளையாடி 123 பந்துகளில் 185 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது சாதனை பதிவாக இருந்தது.
இந்த நிலையில், ஷாவின் இன்றைய சதத்தினால் போட்டி தொடரில் அவர் மொத்தம் 754 ரன்கள் சேர்த்து முன்னிலையில் உள்ளார். 3 போட்டிகளில் கேப்டனாக இருந்த ஷா அவற்றில் ஒரு போட்டியில் இரட்டை சதமும் மற்ற 2 போட்டிகளில் சதமும் விளாசியுள்ளார்.