ஓமானில் நடைபெற்றுவரும் வளர்ந்துவரும் வீரர்களைக் கொண்ட அணிகளுக்கான ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை ஏ அணி தனது ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் 11 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
அப் போட்டியில் இலங்கையின் சுழல்பந்துவீச்சாளர் துஷான் ஹேமன்த 4 ஓவர்களில் 23 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 6 விக்கெட்களை கைப்பற்றி அசத்திய போதிலும் அவரது முயற்சி இறுதியில் வீண்போனது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் ஏ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களைக் குவித்தது. ஸுபைத் அக்பாரி 57 ஓட்டங்களையும் சிதிக்குல்லா அத்தல் 83 ஓட்டங்களைப் பெற்றதுடன் முதலாவது விக்கெட்டில் 142 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆப்கானிஸ்தான் ஏ அணியை பலமான நிலையில் இட்டனர்.
6ஆவதாக பந்து வீச அழைக்கப்பட்ட துஷான் ஹேமன்த 6 விக்கெட்களை வீழ்த்தினார். மற்றைய விக்கெட் ரன் அவுட் முறையில் வீழ்ந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 155 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
அணித் தலைவர் நுவனிது பெர்னாண்டோ 51 ஓட்டங்களையும் அஹான் விக்ரமசிங்க 31 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களை விட வேறு எவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை.
பந்தவீச்சில் பரிதூன் தாவூத்ஸாய் 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பிலால் சமி 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கஸன்பார் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.