இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யவுள்ள 19 வயதுக்குபட்பட்ட இலங்கை அணியின் உதவித் தலைவராக சண்முகநாதன் ஷாருஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி அணியின் தலைவரும் விக்கெட்காப்பாளருமாவார்.
தென் ஆபிரிக்காவில் இந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 5 போட்டிகளில் 118 ஓட்டங்களைப் பெற்றதுடன் 7 ஆட்டமிழப்புகளில் (5 பிடிகள், 2 ஸ்டம்ப்கள்) பங்களிப்பு செய்திருந்தார்.
இதேவேளை, 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக காலி, மஹிந்த கல்லூரி வீரர் தினுர களுபஹன நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்திருந்தார். 3 அரைச் சதங்களுடன் 196 ஓட்டங்களைப் பெற்ற அவர், 5 விக்கெட்களையம் கைப்பற்றியிருந்தார்.
அணியில் இடம்பெறுவோரில் புலிந்து பெரேரா, விஹாஸ் தெவ்மிக்க ஆகியோரும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடிய மற்றைய இரண்டு வீரர்களாவர்.
19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கு முன்னாள் தேசிய வீரரும் கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான ருவன் கல்பகே நியமிக்கப்பட்டுள்ளார்.
துடுப்பாட்டப் பயிற்றுநராக தம்மிக்க சுதர்ஷனவும் வேகப்பந்துவீச்சுப் பயிற்றுநராக ஒமேஷ் விஜேசிறிவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுப் பயண தெரிவாளராக டில்ருவன் பெரேரா இங்கிலாந்து செல்லவுள்ளார்.