நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ உள்ளக பொறிமுறையின் மூலம்தான் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுமென்று தெரிவித்திருக்கின்றார்.
இது ஒரு பழைய கதை.
கடந்த பன்னிரெண்டு வருடங்களாக பலர் நீதி அமைச்சர்களாகப் பொறுப்பேற்றிருக்கின்றனர்.
இதேபோன்று, வெளிநாட்டு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றிருக்கின்றனர்.
இந்தக் காலத்தில் அனைவருமே உள்ளக பொறிமுறை தொடர்பில்தான் பேசி வந்திருக்கின்றனர்.
ஆனால், எவருமே தாங்கள் கூறும் உள்ளக பொறிமுறை ஏன் வெற்றியளிக்கவில்லை – ஏன் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை தங்களால் பெற முடியவில்லை என்பது தொடர்பில் சிந்திக்க முயற்சிக்கவில்லை.
ரணில் – மைத்திரி ஆட்சிக்காலம் இதற்கு சற்று விதிவிலக்கானது.
ஏனெனில், அப்போதும் உள்ளக பொறிமுறை பற்றித்தான் பேசப்பட்டது.
ஆனால், ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொண்டதன் மூலம் அவற்றை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.
ஆனால், ராஜபக்ஷக்களோ சர்வதேச தலையீடுகளை முற்றிலுமாக நிராகரித்தனர்.
தற்போது, ரணில் அதிகாரத்தில் இருந்தாலும்கூட ராஜபக்ஷக்களின் பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டில்தான் அரசாங்கம் இருக்கின்றது.
இந்தப் பின்புலத்தில் ராஜபக்ஷக்களின் கொள்கை நிலைப்பாடே இப்போது நடைமுறையில் இருக்கின்றது.
அதாவது, இதிலுள்ள நகைச்சுவையான விடயம் என்னவென்றால் ராஜபக்ஷக்களை எதிர்க்கும் விஜயதாஸ ராஜபக்ஷ, ராஜபக்ஷக்களின் வெளிவிவகார அணுகுமுறையையே பின்பற்றுகின்றார்.
உள்ளக பொறிமுறை விடயத்துக்கு வருவோம்.
உள்ளக பொறிமுறை தொடர்பில் விவாதிக்கும்போது ஓர் அடிப்படையான கேள்வி எழுகின்றது.
அதாவது, இதுவரையில் ஏன் உள்ளக பொறிமுறை வெற்றியளிக்கவில்லை? உள்ளக பொறிமுறையை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தால் நிலைமைகள் இந்தளவு தூரம் சிக்கலடைந்திருக்காது.
ஆனால், உள்ளக பொறிமுறையை நேர்மையாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுக்கக்கூடிய அரசியல் உறுதிப்பாடு தென்னிலங்கையின் அரசியல் தலைமைகளிடம் இருந்திருக்கவில்லை.
இதன் காரணமாகவே உள்ளக பொறிமுறை வெற்றியளிக்கவில்லை.
உள்ளக பொறிமுறையில் தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.
நம்பிக்கை வைக்கக்கூடியவாறு இதுவரையில் தென்னிலங்கை செயல்படவுமில்லை.
எனவே, நல்லிணக்கம் தொடர்பில் உரையாடுவோர் முதலில் ஏன் இதுவரையில் நல்லிணக்க முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்பது தொடர்பில்தான் சிந்திக்க வேண்டும்.
கடந்த பன்னிரெண்டு வருட கால நல்லிணக்க முயற்சிகளால் நன்மையடைந்தவர்கள் எவரேனும் இருப்பார்கள் என்றால், ஒரு தரப்பினரை பற்றியே நாம் கூறமுடியும்.
அதாவது, நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போவதாகக்கூறும் அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரிவோர் மட்டும்தான் நல்லிணக்க முயற்சிகளால் நன்மையடைந்திருக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கண்ணோட்டத்தில் சிந்திப்பதாயின், கடந்த பன்னிரெண்டு வருடகால நல்லிணக்க முயற்சிகள் முற்றிலுமாகத் தோல்விடைந்திருக்கின்றன.
எனவே, அரசாங்கமும் நல்லிணக்க முயற்சிகளில் கரிசனை காண்பிக்கும் சிவில் சமூக குழுக்களும் உள்ளக பொறிமுறை ஏன் தோல்வியடைந்தது என்பது தொடர்பிலேயே தங்களுடைய கவனத்தை குவிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் நல்லிணக்க முயற்சிகள் என்னும் பெயரில் இடம்பெறும் செயல்பாடுகள் முன்னரைப்போல் தோல்வியிலேயே முடிவுறும்.