பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரிப்பு

0
157

நாட்டில் போதைப்பொருள் பாவனை தற்போது வேகமாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் வெளியாகியுள்ள நிலையில், போதைப்பொருளின் பிரதான இலக்காக பாடசாலை மாணவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், விருந்துபசார வைபவங்களை நடத்தி ஐஸ் போதைப்பொருளை பல்வேறு தரப்பினருக்கு அறிமுகப்படுத்தும் இரகசியத் திட்டமொன்று போதைப்பொருள் கடத்தல்காரர்களால் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த இரகசிய வேலைத்திட்டத்தின் முதல் இலக்கு பாடசாலை மாணவர்களென அவர் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் பாவனை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
விருந்து நிகழ்வுக்கு வருகை தரும் பாடசாலை மாணவர்களுக்கு, போதைக்கு அடிமையாகியுள்ளவர்கள் சில பானங்களை வழங்கி ஐஸ் போதை பொருள் பாவனையை ஊக்குவிப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனவே வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சிறுவர்களை அழைத்து வரும் போது பெற்றோர் தமது பிள்ளைகள் குறித்து கவனமாக செயற்பட வேண்டும்.
ஒரு குழந்தை தன் பெற்றோரிடமிருந்து தூர விலகி செல்ல முயன்றால் அல்லது கல்வி, உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டாலோ, தூங்க முடியாமல் அவஸ்தை பட்டால் அவர்கள் போதைப்பொருளுக்கு ஆளாகியிருக்க நேரிடும். இது மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டைத் தூண்டி மரணத்தை ஏற்படுத்தலாம்.
மாணவர்கள் வீட்டில் பணம் கேட்டால் கவனமாக இருக்க வேண்டும்.
மாறும், பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் எந்த நேரமும் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.