இந்தியாவின் பெங்களூரு கோரமங்கலம் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 13ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் நடப்பு சம்பியன் இலங்கை நான்காவது நேரடி வெற்றியை செவ்வாய்க்கிழமையன்று (22) ஈட்டிக்கொண்டது.
ஜப்பானுக்கு எதிரான போட்டியில் மிகத் திறமையாக விளையாடிய இலங்கை 85 – 18 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
15 நிமிடங்களைக் கொண்ட முதல் இரண்டு ஆட்ட பகுதிகளை முறையே 17 – 6, 22 – 5 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை தனதாக்கிக்கொண்டு இடைவேளையின்போது 39 – 11 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.
இடைவேளைக்குப் பின்னரும் ஆதிக்கம் செலுத்திய இலங்கை அடுத்த இரண்டு கால் மணி நேர ஆட்டங்களை முறையே 23 – 1, 23 – 6 என தனதாக்கி ஒட்டுமொத்த நிலையில் 85 – 18 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.
இப் போட்டியின் முதல் 3 ஆட்ட நேர பகுதிகளில் திசலா அல்கம, ரஷ்மி பெரோ ஆகியோருக்குப் பதிலாக துலங்கி வன்னித்திலக்க, ஹசித்தா மெண்டிஸ் ஆகிய இருவரும் கோல் எதிர்த்தாடும் நிலை மற்றும் கோல் போடும் நிலை ஆகியவற்றில் விளையாடினர்.
துலங்கி வன்னித்திலக்க 38 முயற்சிகளில் 36 கோல்களையும் ஹசித்தா மெண்டிஸ் 30 முயற்சிகளில் 26 கோல்களையும் போட்டனர். கடைசி கால் மணி நேரத்தில் மாத்திரம் விளையாடிய திசலா அல்கம 91 முயற்சிகளில் 18 கோல்களையும் ரஷ்மி பெரேரா 5 முயற்சிகளில் 5 கோல்களையும் போட்டனர்.