பாகிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு, அமெரிக்காவின் தலையீடுதான் காரணம் என முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் அவரது ஆதரவாளர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். அமெரிக்காவுக்கு எதிராக அவர்கள் நேற்று முன்தினம் நடத்திய போராட்டத்தில், பாகிஸ்தானிய அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவரை அவர்கள் தாக்கினர்.
இந்நிலையில், அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தால் தேர்வு செய்யப்பட்ட புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு நாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளோம். அவருடனும், அவரது அரசுடனும் இணைந்து செயல்பட ஆவலுடன் காத்திருக்கிறோம்.
சுமார் 75 ஆண்டுகளாக, அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான உறவு முக்கியமானதாக இருந்துள்ளது. பாகிஸ்தானில் அமைதி மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும் பணியை, பாகிஸ்தான் அரசுடன் இணைந்து தொடர்வதை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். ஆட்சி மாற்றம் தொடர்பாக அமெரிக்கா மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. மனித உரிமைகளை மதிப்பது உட்பட, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக கொள்கைகளை அமைதியாக நிலைநாட்டுவதை நாங்கள் ஆதரிக்கிறோம். இதை எந்த நாட்டிலும், எந்த கட்சி மீறினாலும், நாங்கள் ஆதரிப்பதில்லை.
இம்ரான் கான் அரசை வெளியேற்றியதில், அமெரிக்காவுக்கு தொடர்பில்லை என பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்த கருத்தை, அமெரிக்கா ஒப்புக்கொள்கிறது.
இவ்வாறு நெட் பிரைஸ் கூறியுள்ளார்.