27 C
Colombo
Saturday, March 15, 2025
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Blog Page 5732

விருந்து சிற்றிதழின் ஆறாவது வெளியீட்டு விழா

0

கிழக்கில் இருந்து வெளிவரும் விருந்து சிற்றிதழின் ஆறாவது வெளியீட்டு விழா இன்று அம்பாறை மாவட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் ஓய்வு நிலை அதிபர் இ.இராஜரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ், கலாசார உத்தியோகத்தர் ரி.பிரபாகரன், மாநகர சபை உறுப்பினர் கே.சிவலிங்கம், எழுத்தாளர் எஸ்.அரசரெத்தினம், விருந்து சிற்றிதழின் ஆசிரியர் செ.துஜியந்தன் உட்பட கலை இலக்கியவாதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

நூல் அறிமுகத்தினை கவிஞர் நீலாவணை இந்திரா நிகழ்த்தியதுடன், நூலின் முதற் பிரதியை கல்முனை மாநகர சபை உறுப்பினர் கே.சிவலிங்கம் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

ஈழத்தின் சிற்றிதழ்களின் வளர்ச்சிக்கு கலை இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் கலாசார திணைக்களம் ஆதரவு வழங்க வேண்டும். அத்துடன் பல புதிய இளம் படைப்பாளிகள் உருவாக்குவதற்கு இவ்வாறான சிற்றிதழ்கள் களம் அமைத்து கொடுக்க வேண்டும் என பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் குறிப்பிட்டார்.

வாழைச்சேனை பிள்ளையார் சிலை உடைப்பு: சந்தேக நபர் கைது

0

மட்டக்களப்பு மாவட்ட வாழைச்சேனையில் ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்ட வழிப்பிள்ளையார் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் மேற் கொண்ட விசாரணையில் சந்தேக நபர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

உதவிப் பொலிஸ் அத்தியட்ச்சகர் ஜி.எஸ்.ஜெயசுந்தரவின் ஆலோசனையின் பேரில் அரச புலனாய்வு உத்தியோகஸ்த்தர்கள் மேற்கொண்ட விசாரணையின்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் ஆலயம் அமைந்துள்ள பிரதேசத்திலே வசித்து வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

நீண்ட காலமாகியும் தனக்கு அரச உத்தியோகம் கிடைக்கவில்லையென்றும் திருமண விடயமும் சரிவராத காரணத்தினால் வழிப்பிள்ளையாரை கட்டிப்பிடித்து மனவேதனையில் அழுததாகவும் அதனால் ஏற்பட்ட உராய்வு, மற்றும் அசைவு காரணமாக பிள்ளையாரின் உடற்பாகங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தனது வாக்கு மூலத்தினை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

70 வருட கால பழமை வாய்ந்த இரண்டரை அடி உயரமுள்ள குறித்த சிலையே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தடையவியல் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அடையாள அட்டை தகவல்களை இணையம் மூலம் உறுதிப்படுத்த தீர்மானம்

0

தேசிய அடையாள அட்டையின் தகவல்களை இணைய முறை ஊடாக உறுதிப்படுத்த ஆட்பதிவுத் திணைக்களம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை செயற்பாட்டிற்கு இந்தத் திட்டத்தை இடைக்காலத் தீர்வாக அறிமுகப்படுத்தி வைக்கவுள்ளதாகத் திணைக்களத்தின் ஆணையாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனம், அரச கூட்டுத்தாபனம், அரசியலமைப்பு சபை, அரசாங்கத்திற்கு இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் அல்லது எழுத்துபூர்வ சட்டத்தின் கீழ் இலங்கையில் நிறுவப்பட்டுள்ள நிறுவனங்களில் தேவைகளைப் பூர்த்தி செய்யும் போது வாடிக்கையாளரின் விருப்பப்படி மட்டுமே அடையாள அட்டை தகவல்களைச் சான்றளிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் வாடிக்கையாளர்களின் தகவல்களைச் சான்றளிப்பதற்காகக் குறித்த நிறுவனங்கள் ஆட்பதிவுத் திணைக்களங்களுடன் முழுமையான ஒப்பந்தத்திற்கு வர வேண்டும்.

தனிப்பட்ட அடையாளத்தை நம்பகத்தன்மையுடன் சரி பார்க்கவும், தேசிய அடையாள அட்டையைத் தவறாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பல்வேறு மோசடிகளைத் தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆலையடிவேம்பில் ஆயுர்வேத மருந்து பொதிகள் வழங்கும் நிகழ்வும் விழிப்புணர்வும்

0

அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் ஆயுர்வேத மருந்து பொதிகள் வழங்கும் நிகழ்வும் விழிப்புணர்வும் நடைபெற்றுள்ளது.

கொவிட்-19 வைரசுக்கெதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் ‘இம்முனிட்டி பூஸ்டர்’ எனும் ஆயுர்வேத மருந்து பொதிகள் நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையினரால் பல்வேறு அரச திணைக்கள உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், முப்படையினர் மற்றும் வங்கி கூட்டு ஸ்தாபன ஊழியர்கள் என சகல தரப்பினர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.எல்.எம்.நக்பரின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் வேண்டுகோளுக்கமைய பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான ஆயுர்வேத மருந்து பொதிகளை இன்று வழங்கி வைத்தார்.

அத்தோடு ‘இம்முநிட்டி பூஸ்டர்’ எனும் ஆயுர்வேத மருந்து பொதிகள் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களையும் ஆயுர்வேத மருந்து பொதியினையும் பிரதேச செயலாளரிடம் கையளித்ததுடன் விழிப்புணர்வு கருத்துக்களையும் உத்தியோகத்தர் மத்தியில் முன்வைத்தார்.

இதேநேரம் பிரதேச செயலாளரும் ஆயுர்வேத மருந்துகளின் பயன்பாடு தொடர்பிலும் மேலத்தேய நாடுகளில் இதற்காக வழங்கப்படும் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார்.

சுகாதார சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் அனுசரணையுடன் நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை இணைந்து, நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கக் கூடிய ஆயுர்வேத மருந்து வகைகளை அம்பாறை மாவட்ட மக்கள் மத்தியில் பிரபல்லியப்படுத்தி வருகின்றது.

இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் உள்ளிட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

மயூரனின் யாழ். மாநகர சபை உறுப்புரிமையை நீக்கும் தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை நீடிப்பு

0

மகேந்திரன் மயூரனின் யாழ். மாநகர சபை உறுப்புரிமையை நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தீர்மானத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை யாழ். மாவட்ட நீதிமன்றம் மேலும் இரண்டு வார காலத்திற்கு நீடித்துள்ளது.

யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மனுதாரர் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் முன்னிலையானார்.

பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகளான ந.காண்டீபன், க.சுகாஷ் ஆகியோர் முன்னிலையாகினர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்தது.

எதிர்வரும் 20 ஆம் திகதி எழுத்து மூல சமர்ப்பணத்தை இரு தரப்பினரும் முன்வைக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

0

அம்பாறை மாவட்ட கல்முனை பெரியநீலாவணைக் கிராமத்தில் சௌபாக்கியா வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதியின் சௌபாக்கியா விசேட வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு பிரதேச செயலகத்திற்கு ஒரு வீடு எனும் திட்டத்தில் அம்பாறை மாவட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியநீலாவணைக் கிராமத்தில் சமூர்த்திப்பயனாளி ஒருவருக்கு 10 இலட்சம் ரூபா செலவில் அமையவுள்ள வீட்டிற்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.சந்திரகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் வழிகாட்டலில் சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற நிகழ்வில் கிரமசேவகர், சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி வலய உதவியாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பயனாளியின் பங்களிப்புடன் 10 இலட்சம் செலவில் இவ் வீடு நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தப்பட்ட பதுகம புதிய குடியேற்றம் மீண்டும் திறப்பு

0

களுத்துறை மாவட்டம் மத்துகம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பதுகம புதிய குடியேற்றப் பகுதி இன்று பிற்பகல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இப்பகுதி அண்மையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று பிற்பகல் குறித்த பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மாவீரர் நாளை அனுஷ்டிக்க அனுமதி கிடைத்தால் சுரேன் ராகவனுக்கு செல்வம் அடைக்கலநாதன் ஆதரவு

0

அரசியல் கைதிகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாகத் தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், மாவீரர் நாளை அனுஷ்டிக்கவும் அனுமதியைப் பெற்றுத்தந்தால், அவரின் செயல்பாடுகள் அனைத்துக்கும் ஆதரவு வழங்கத் தயார் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

சுரேன் ராகவன் அரசியல் கைதிகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘முன்னாள் வடமாகாண ஆளுநர் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், கருத்தொன்றை வெளியிட்டுள்ள நிலையில் அரசியல் கைதிகள் விடுதலை என்பது எல்லோருக்கும் சாதாரண விடயம் போல் தெரிகின்றது.

சுரேன் ராகவன் சுதந்திரக் கட்சியோடு தற்போதும் இருப்பவர். அக்கட்சியின் தலைவரான மைத்திரிபால, ஜனாதிபதியாக இருக்கின்றபோது கிளிநொச்சியில் ஆனந்த சுதாகரனின் விடுதலை சம்பந்தமாக வாக்குறுதியளித்து சென்றிருந்தார். ஆனால் தற்போது வரைக்கும் அவரின் விடுதலையும் நடக்கவில்லை. இதன்போது சுரேன் ராகவன் எங்கிருந்தார்.

அவர் அப்போதே ஜனாதிபதியோடு பேசி, தாயை இழந்த அந்தக் குழந்தைகளின் தந்தையை விடுதலை செய்திருக்க முடியும். தற்போதும் கூட அந்தக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றது.

அந்தக்கட்சியின் அமைச்சுப் பதவிகளையும் பெற்றுள்ளனர். இந்நிலையில் நீதி அமைச்சருக்கு அவர்களை விடுதலை செய்ய அதிகாரமில்லை. ஆகவே அவருக்கு கடிதம் எழுதுவதை விட ஜனாதிபதியிடம் தற்போது அதிகாரம் குவிந்து கிடக்கின்றது. அந்த அதிகாரத்தை குவித்துக் கொடுப்பதில் சுரேன் ராகவனும் உடந்தையாக இருந்துள்ளார். எனவே அவர் ஜனாதிபதியுடன் பேசி அரசியல் கைதிகளின் விடுதலையை பெற்றுத்தந்தால் நாங்கள் வரவேற்போம்.

அரசியல் நோக்கத்துக்காக நீதி அமைச்சரிடம் நியாயம் கேட்பது அர்த்தமற்றது. எனவே ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அரசியல் கைதிகளின் விடுதலையை உறுதிப்படுத்த முனைப்பு காட்ட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பாராளுமன்றத்தில் அரசியல் கைதிகள் தொடர்பில் விவாதத்தை மேற்கொண்டிருக்கின்றது. அப்போது இதே அரசாங்கத்தில் உள்ளவர்கள் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லையென்றே தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அதிகாரமில்லாத நீதி அமைச்சரிடம் சுரேன் ராகவன், எமது இளைஞர்களின் விடுதலை தொடர்பில் கேட்பதை விட ஜனாதிபதியிடம் பேசி விடுதலையைப் பெற்றுத் தந்தால் நாங்களும் எங்கள் மக்களும் மட்டற்ற மகிழ்ச்சியடைவதோடு நன்றி சொல்ல கடமைப்படுவோம்.

அதனை விடுத்து எமது அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்போகின்றேன் எனப் பாசாங்கு காட்டக்கூடாது என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அத்துடன் ஒரு கோரிக்கையை சுரேன் ராகவனிடம் முன்வைக்க விரும்புகின்றேன்.

அதாவது, அரசியல் கைதிகள் எமது விடுதலைப்போராட்டத்தில் ஏதோ ஒரு தியாகத்தை செய்தே இன்று சிறையில் வாடுகின்றனர்.

அந்தவகையில் தமது உயிரை இந்த மண்ணுக்காக தியாகம் செய்த போராளிகளது நினைவு நாள் நவம்பர் 27 ஆம் திகதி வரவுள்ளது. எனவே எமது மக்கள், தமது உள்ளக்கிடக்கைகளையும் சோகத்தையும் வெளிப்படுத்தும் நாளினை அனுஷ்டிப்பதற்கான அனுமதியைப் பெற்றுத்தந்தால் நாங்கள் உங்களுக்கு பின்னால் அணிதிரளத் தயாராகவுள்ளோம்.

அத்துடன் இவ்விரு செயல்பாட்டையும் ஜனாதிபதியுடன் பேசி செயல்படுத்தித் தந்தால், சுரேன் ராகவனின் அனைத்துச் செயல்பாட்டுக்கும் எனது ஆதரவை வழங்குவேன்’ என அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தில் மூவருக்கு கொரோனா உறுதி

0

மட்டக்களப்பு நகரில் கொரனா தொற்றுக்குள்ளாகிய நபரின் குடும்பத்தில் மூன்று பேருக்கு தற்போது கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே தொற்றுக்குள்ளான நபரின் 50வயதுடைய மனைவி 16 மற்றும் 14 வயதுடைய இரு பிள்ளைகளுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 20 வயது மகனுக்கு தொற்று உறுதிப்படுத்தப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்டநபர் செங்கலடியில் கடையொன்றில் கணக்குப்பகுதியில் கடமைபுரிபவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய நிலமையின்படி மட்டக்களப்பில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 90ஆக தொற்று உயர்ந்துள்ளதுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

கதிர்காமத்திற்கு சுற்றுலா சென்ற 120 பேர் தனிமைப்படுத்தல்

0

கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்கு சுற்றுலா சென்ற 120 பேரையும் கதிர்காமம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று (06-11-2020) முதல் 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தியுள்ளனர்.

கதிர்காமத்திற்கு சுற்றுலா சென்ற இந்த 120 பேரும், அவர்கள் தங்கியிருந்த விடுதிகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கதிர்காமம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சமன் திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்கு எந்த அடிப்படையில் இந்த 120 பேரும் சுற்றுலா சென்றனர் என விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொழும்பிலிருந்து கதிர்காமம் வந்த சுற்றுலா வாசிகள் தொடர்பில் கதிர்காமம் பொதுச் சுகாதாரப் பிரிவினருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கமைய பொதுசுகாதாரப் பிரிவினர் விரைந்து அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு அவர்களை அவரவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளிலேயே தனிமைப்படுத்தியுள்ளனர்.