29 C
Colombo
Saturday, March 15, 2025
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Blog Page 5736

டெனிஸ் அரங்கில் 1000 வெற்றிகள் – பதிவுசெய்தார் ரபேல் நடால்

0

பாரிஸ் மாஸ்டர்ஸ் டெனிஸ் தொடரின் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் சக நாட்டு வீரரான லோபஸை வீழ்த்தி, ரபேல் நடால் டெனிஸ் அரங்கில் ஆயிரம் வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளார்.

பிரெஞ்சு ஓபன் வெற்றியின் பின்னர் முதன் முறையாக விளையாடிய ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் சக நாட்டு வீரர் லோபஸை எதிர்த்து களமிறங்கினார்.

சுமார் இரண்டரை மணிநேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் நடால் 4-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் லோபஸை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் நடால், டெனிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆயிரம் வெற்றிகளைப் பதிவுசெய்தோருக்கான பட்டியலில் ஜிம்மி கான்னர்ஸ் (1,274) ரோஜர் பெடரர் (1,242), இவான் லென்ட்ல் (1,068) ஆகியோருக்கு அடுத்ததாக இடம்பிடித்தார்.

நாட்டில் இதுவரை 273 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதி

0

நாட்டில் இதுவரை 273 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதில் மேல் மாகாணத்தில் மட்டும் 180 பொலிஸார் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

257 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் 1,302 பொலிஸ் அதிகாரிகள் சுயதனிமைப்படுத்தலில் உள்ளனர்.

இதேவேளை, நேற்று பொரளை பொலிஸ் நிலையத்தில் மாத்திரம் 56 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்கையும் எண்ண வேண்டும் – ஜோ பைடன் ஆதரவாளர்கள் போர்க்கொடி

0

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை நெருங்கியுள்ளார். இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்துக்குத் தயாராகி வருகின்றனர்.

இதேவேளை ஒவ்வொரு வாக்கையும் மீண்டும் எண்ண வேண்டும் எனக்கோரி ஜோ பைடனின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பின்தங்கியுள்ளார்.

கடும் போட்டியுள்ள மாநிலங்களில் ட்ரம்ப் முன்னிலை வகித்து வரும் நிலையில், இந்த தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, வாக்கு எண்ணிக்கையை நிறுத்தும்படி வலியுறுத்தியுள்ளார். 3 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், வெற்றியை நெருங்கியுள்ள ஜோ பைடன் ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்துக்குத் தயாராகி வருகின்றனர். சில மாநிலங்களில் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால், வாக்கு எண்ணிக்கைக்கு தடை ஏற்படுத்தும் முயற்சியை ஜோ பைடன் ஆதரவாளர்கள் கண்டித்துள்ளனர்.

ஒவ்வொரு வாக்கையும் கண்டிப்பாக எண்ண வேண்டும் என்று வலியுறுத்தி நியூயோர்க்கில் நேற்று ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தினர். 5ஆவது அவென்யூவிலிருந்து வோஷிங்டன் சதுக்கம் வரை அமைதியான முறையில் இடம்பெற்ற இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இதேபோன்று மிச்சிகனில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வலியுறுத்தி ட்ரம்ப் ஆதரவாளர்கள் டெட்ராய்ட்டிலுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வெலிக்கடையில் 5 பெண் கைதிகள் உட்பட ஆறு பேருக்கு கொரோனா

0

வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் பரிவியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலை மருத்துவப் பணியாளர் ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து சிறைக் கைதிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போதே ஐந்து பெண் கைதிகள் உட்பட ஆறு பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு கொரோனா தொற்றிலிருந்து விடுபட யாழில் சிறப்பு வழிபாடுகள்

0

கொரோனா தொற்றிலிருந்து நாடும், நாட்டு மக்களும் விடுபட வேண்டி, யாழ்ப்பாணம் பாணங்குளம் நாச்சியம்மன் ஆலயத்தில் யாழ்.மாவட்டச் செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் இன்றுகாலை சிறப்பு பூசைவழிபாடுகள் இடம்பெற்றன.

பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள அருளாசி வேண்டி, நாடு முழுவதிலுமுள்ள இந்து ஆலயங்களில் விஷேட பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் யாழ். மாவட்டச் செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பாணங்குளம் நாச்சியம்மன் ஆலயத்தில் இன்று காலை விஷேட வழிபாடு நடத்தப்பட்டது. இந்த வழிபாட்டில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மாவட்ட செயலக கலாசார அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

யாழ். மாவட்டத்தில் தற்போதுள்ள சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் இந்த பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

0

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகமாகக் காணப்படுவதாக யாழ்ப்பாணம் பிராந்திய வளிமண்டல ஆராய்ச்சி திணைக்களப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் தொடர்பில் இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலையால் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகமாகக் காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்திலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் கரையோர பிரதேசத்தில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, வடமத்திய, ஊவா, வடமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மழை பெய்யும் வேளைகளில், இடிமின்னல் தாக்கத்தால் ஏற்படும் இழப்புக்களைக் குறைப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை அறிவுறுத்துகின்றோம். அதேவேளை காற்றின் வேகமும் அதிகரிக்கக்கூடிய சூழ்நிலை காணப்படுகிறது.

கடந்த 4ஆம் திகதி காலை 8.30 மணியிலிருந்து 5ஆம் திகதி காலை 8.30 மணிவரை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் 11.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், அச்சுவேலிப் பகுதியில் 8.3 மி.மீ மழை வீழ்ச்சியும், பருத்தித்துறைப் பகுதியில் 4.8 மி.மீ மழை விழ்ச்சியும், கோட்டைப் பகுதியில் 0.8 மி.மீ மழை வீழ்ச்சியும், நெடுந்தீவுப் பகுதியில் 7.0 மி.மீ மழை வீழ்ச்சியும், சாவகச்சேரி பகுதியில் 4.9 மி.மீ மழை வீழ்ச்சியும், யாழ்ப்பாணம் பகுதியில் 12.6 மி.மீ மழை வீழ்ச்சியும், தெல்லிப்பழைப் பகுதியில் 0.7 மி.மீ மழை வீழ்ச்சியும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் 9.8 மி.மீ மழை வீழ்ச்சியும், கிளிநொச்சி ஆனையிறவுப் பகுதியில் 10.0 மி.மீ மழை வீழ்ச்சியும், அக்கராயன் பகுதியில் 8.0 மி.மீ மழை வீழ்ச்சியும் மற்றும் பதிவாகியுள்ளது.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் மழை வீழ்ச்சி குறைவாகவே காணப்படுகின்றது. எமது நாட்டில் பொதுவாக ஒக்ரோபர், நவம்பர் மாதங்களில் மழை வீழ்ச்சி அதிகமாகக் காணப்படும்.

இந்த வருடம் ஒக்ரோபர் மாதத்தில் மிகக் குறைவாக 23.3 மி.மீ மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளது. அது மாத்திரமின்றி நவம்பர் மாதத்திலும் குறைந்த மழை வீழ்ச்சியே எதிர்பார்க்கப்படுகின்றது.இதேவேளை டிசெம்பர் மாதக் காலப்பகுதியில் ஓரளவு மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் எனத் தெரிவித்தார்.

பாடசாலைகளை மூடியதன் விளைவு பல ஆண்டுகளுக்கு தாக்கம் செலுத்தக்கூடும்-ஜனாதிபதி

0

பாடசாலைகளை மூடியதன் விளைவு, குழந்தைகளின் கல்வியில் பல ஆண்டுகளுக்குத் தாக்கம் செலுத்தக்கூடும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

இந்தச் செயலணிக்கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்தவை வருமாறு:

கொரோனா வைரஸ் தொற்று சுகாதாரம், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக, முழு உலகிலும் பல விதங்களில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் முதல் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நபரை கடந்த மார்ச் மாதம் அடையாளம் கண்ட நாளிலிருந்து, மக்களின் பாதுகாப்பிற்காக ஒரு அரசாங்கமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

இருப்பினும், இத்தொற்று கிருமிக்கு எதிராக நிரந்தர சிகிச்சை(மருந்து) இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், நாம் இனி நாட்டை முற்றாக மூடிவிட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்க முடியாது.

பாடசாலைகளை மூடியதன் விளைவு குழந்தைகளின் கல்வியில், பல ஆண்டுகளுக்குத் தாக்கம் செலுத்தக்கூடும். மேலும், அன்றாடம் தொழில் செய்பவர்கள் மற்றும் வர்த்தக
சமூகத்தினர் மீது கொரோனா பாரியளவில் தாக்கத்தை செலுத்தியுள்ளது.

எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையர்களாகிய நாம் அனைத்து அரசியல் சித்தாந்தங்களையும் வேறுபாடுகளையும் களைந்து நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒன்றுபட வேண்டும்.

சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், நல்ல சுகாதாரப் பழக்கவழக்கங்களையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவதன் மூலம், கொரோனாவைத் தோற்கடிக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊரடங்கு நீக்கப்பட்டாலும் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிப்பது அவசியம்

0

மேல் மாகாணத்தில், எதிர்வரும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என்று கொரோனா பரவல் தடுப்பு தேசிய செயல்பாட்டு மையத் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டாலும் சுகாதார ஆலோசனைகளைக் கடைப்பிடித்து செயல்படுவது அனைவரின் பொறுப்பாகும்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இராணுவத் தளபதி இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 24 மணிநேரத்தில் 200 பேர் கைது

0

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 200 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த 24 மணிநேரக் காலப்பகுதியில் 18 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஒக்ரோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 2,393 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 356 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை அரசாங்கத்தால்; பிறப்பிக்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரை 78 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல்,தேவையற்ற நடமாட்டங்களைத் தவிர்த்தல் என்பன அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறையினரின் பிரதான அறிவுறுத்தல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தளத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி!

0

புத்தளம், ஆனமடுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில், ஆனமடுவ பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி உயிரிழந்தார்.

இதேவேளை, இந்த விபத்தில் ஆனமடுவ குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி 38 வயதுடைய நிக்கவெரட்டிய பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றை துரத்திச் சென்றபோது பொலிஸார் பயணித்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டையிழந்து வீதியின் சுற்றுவட்ட கட்டடத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.