உலகளவில் மிகச்சிறந்த டி20 அணிகளில் ஒன்றாக கருதப்பட்டு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த முறை கிட்டத்தட்ட பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. அது மட்டுமல்ல, புள்ளிப்பட்டியலிலும் தற்போது கடைசி இடத்தில் இருக்கிறது.
இதைவிட மோசமான ஒரு விஷயம் என்னவென்றால், ஆரம்பத்தில் கடைசி ஓவர்களில் தோல்வியை தழுவத் துவங்கிய சென்னை தற்போது மிக மோசமான தோல்விகளைச் சந்தித்து வருகிறது.
அந்த வகையில் அக்டோபர் 23-ம் தேதி இரவு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை அணி விளையாடிய விதம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வரலாற்றில் மிக மோசமான பக்கங்களில் ஒன்றாக பதிந்துள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான கடந்த போட்டியின் முடிவில் தோனி இளைஞர்கள் குறித்து பேசிய ‘Spark’ என்ற விஷயம் சமூக வலைத்தளத்தில் கடும் விமர்சனத்துக்குள்ளானது.
அதனை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கடுமையாக கண்டித்தனர். இந்த நிலையில் இன்றைய போட்டியில் வாட்சன், கேதர் ஜாதவ், கரண் ஷர்மா ஆகியோர் நீக்கப்பட்டு இளம் வீரர்கள் ருதுராஜ், நாராயண் ஜெகதீசனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. இம்ரான் தாஹீரும் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.
மும்பை அணியில் காயம் காரணமாக ரோஹித்துக்கு பதில் பொல்லார்டு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் மும்பை – சென்னை அணிகள் மோதும் போட்டி சிறிய மைதானமான ஷார்ஜாவில் நடைபெறுகிறது என்பதால் மிகப்பெரிய ரன் விருந்து காத்திருக்கிறது என விமர்சகர்கள் கருதினர்.