மாகாண சபைத் தேர்தலில் என்.பி.பியின் தாக்கம் உணரப்படலாம்- இந்திய உயர்ஸ்தானிகர் சூசகம்
மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்காலத்தில் நடைபெறும் போது, வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தியின்
தாக்கம் அங்கும் உணரப்படக் கூடும் என இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பில் ஆராயப்பட்டதாக
தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமையால், தெற்கில் உள்ள தேசியக் கட்சிகள் மீது, தமிழ் மக்களின் ஈடுபாடு அதிகரிக்க
வாய்ப்பிருப்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகருக்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
13வது திருத்தச் சட்டத்தில் உள்ள விடயங்கள் பறிக்கப்படுவதால், 13வது திருத்தச் சட்டம் மீதுள்ள அதிருப்தி தொடர்பிலும் சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் நீண்ட கால மற்றும் குறுங்காலப் பிரச்சினைகள் தொடர்பில், எழுத்துரு மூலம் சமர்ப்பிக்குமாறு, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா,
தமிழரசுக் கட்சியைக் கோரியுள்ளார்.
குறிப்பாக மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம், தாண்டியடி துயிலுமில்ல விவகாரம்
போன்ற பிரச்சினைகள் தொடர்பிலும், இச் சந்திப்பின் போது பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான முன்னெடுப்புக்களின் இந்தியா தொடர்ந்தும் பங்காளியாக இருக்க வேண்டும் என்றும்
தமிழரசுக் கட்சியால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் கடந்த காலங்களில் தென்னிலங்கைக் கட்சிகளோடு சேர்ந்தியங்கியவர்கள் தேர்தலில்
தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டமை தொடர்பிலும் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சீனத் தூதுவரின் செயற்பாடுகள் பொதுப் பிரச்சினைகளை அணுகும் விடயங்களில் நடுநிலைமையுடன் இல்லை என்றும் இந்திய உயர்ஸ்தானிகரால்
தமிழரசுக் கட்சியிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.