30 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அரசியலும் அனுபவமும்

பாராளுமன்ற தேர்தல் பிரசார காலத்தில் ஒரு புறத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுபவமின்மை காரணமாக தேசிய மக்கள் சக்தியின் ‘எல் போர்ட்’ அரசாங்கம் சில மாதங்களில் வீழ்ச்சிய டைந்துவிடும் என்று கூறியதையும் மறுபுறத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் அனுபவத்தைப் பற்றி பெருமை பேசுகின்ற முன்னாள் ஜனாதிபதியும் அவருடன் சேர்ந்தவர்களும்தான் நாட்டைச் சீரழித்தார்கள் என்று கூறியதையும் நாம் அறிவோம்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களில் அதிகப் பெரும்பாலானவர்கள் அரசியலுக்கு புதியவர்கள் என்று பார்க்காமல் அவர்களுக்கு மக்கள் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான ஆசனங்களுடன் ஆணையை வழங்கியிருக்கிறார்கள். ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தலைமையில் புதிய அமைச்சரவை 22 உறுப்பினர்களுடன் பதவியேற்றிருக்கிறது. புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களில் பல்கலைக்கழக கல்விமான்களும் அரசியல்வாதிகளுமாக 13 பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அமைச்சரவையில் ஐந்து பேராசிரியர்களும் துறைசார் நிபுணர்கள் பலரும் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இவர்களில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த அனுபவத்தை கொண்டவர்கள் என்றால் ஜனாதிபதி திஸநாயக்கவும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தும் மாத்திரமே. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இருவரும் பதினான்கு மாதங்கள் ( ஏப்ரல் 2004 – ஜூன் 2005 ) அமைச்சர்களாக இருந்தனர். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பொறுத்தவரை, திஸ நாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து கடந்த இரு மாதங்களாக அமைச்சுப் பொறுப்புக்களை கவனித்த அனுபவத்தை மாத்திரமே கொண்டிருக்கிறார். ஏனைய அமைச்சர்கள் சகலரும் புதியவர்கள் என்பதுடன் அந்த பதவிகளில் எந்த அனுபவத்தையும் கொண்டிராதவர்கள். இது இவ்வாறிருக்க, நாளையதினம் கூடும் புதிய பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவர்கள் முதற்தடவையாக பாராளுமன்றத்துக்கு தெரிவானவர்கள்.

அதாவது 160 பேர் புதியவர்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் (நூறுக்கும் அதிகமானவர்கள்) தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்கள். முன்னைய பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவர்களில் 37 பேரை மாத்திரமே மக்கள் மீண்டும் தெரிவு செய்திருக்கிறார்கள். அமைச்சரவையில் பெரும்பாலானவர்கள் உயர்ந்த கல்வித் தகைமைகளைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இனிமேல்தான் அவர்கள் தங்களது அறிவையும் ஆற்றலையும் ஆட்சிமுறையில் பரீட்சித்து பார்க்கப் போகிறார்கள். அதேவேளை உயர்ந்த கல்வித்தகைமைகளைக் கொண்டிராத அமைச்சர்கள் மக்கள் மத்தியில் அரசியல் பணியாற்றிய வளமான அனுபவத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அனுபவத்தைப் பற்றி பெரிதாக பேசுகின்ற விக்கிரமசிங்க கூட 1977 ஜூலை பாராளுமன்ற தேர்தலில் தனது 28ஆவது வயதில் கம்பஹா மாவட்டத்தின பியகம தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கத்தில் உடனடியாகவே பிரதி வெளியுறவு அமைச்சராகவும் பிறகு சில மாதங்களில் கல்வியமைச்சராகவும் நியமிக்கப்பட்டதையும் மறந்துவிட்டார் போலும்.

அனுபவம் தேவையில்லை என்று இங்கு வாதிடப்படவில்லை. ஆனால், அரசியல் துணிவாற்றலும் நேர்மையும் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்ககும் பண்புமே முக்கியமானவை. இறுதியாக இரு சுவாரஸ்யமான கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள ‘ஈழநாடு’ விரும்புகிறது. புதியவர்கள் பெருமளவில் பாராளுமன்றத்துக்கு வருவது குறித்து ஆசிரிய தலையங்கம் எழுதிய ஒரு கொழும்பு ஆங்கிலப்பத்திரிகை ‘தற்போதைய நிலைவரம் வளரிளம் பருவத்தில் உள்ளவர்களையும் மதுவையும் வாகனச்சாவியையும் ஒன்றாக வைத்தது போன்று இருக்கக்கூடாது’ என்று குறிப்பிட்டிருந்தது. புதிதாக வரும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அனுபவமில்லை என்று கூறப்படும் விமர்சனம் புதுமாப்பிள்ளையிடம் ‘குடும்பம் நடத்திய அனுபவம்’ இருக்கிறதா என்று கேட்பதற்கு ஒப்பானதாகும் என்று கூறினார் முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles