இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று முன்னாள் நீதியமைச்சர் கலாநிதி
விஜயதாஸ ராஜபக்ஸ கூறியிருக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தல் பிரசாரங்களுக்காக வடக்குக்கு வந்த ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க சட்டமா அதிபருடன் ஆலோசனை கலந்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு தனது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று வழங்கிய உறுதிமொழிக்கு எதிர் வினையாகவே இதை ராஜபக்ஸ கூறினார்.
நீதியமைச்சர் பதவியில் இருந்து தான் விலகிய நேரத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 11 பயங்கரவாதிகளே சிறையில் இருந்ததாகவும் அவர் களில் 1996 ஜனவரி இலங்கை மத்திய வங்கி குண்டுத் தாக்குதல், 1996 ஜூலை தெகிவளை ரயில் குண்டுவெடிப்பு மற்றும் 2008 பிலியந்தலை பஸ் நிலையக் குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களில் குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்களும் அடங்குகின்றனர் எனவும் அதற்கு மேலதிகமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 13 சந்தேகநபர்கள் தடுப்புக்காவலில் இருக்கின்றனர் என்றும் ராஜபக்ஸ கொழும்பு ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு நேற்றைய தினம் கூறினார். உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள் தொடர்பில் சட்டமா அதிபர் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கமுடியாது.
கொடூரமான குற்றச் செயல்களுக்காக குற்றவாளிகளாகக் காணப்பட்ட பிறகு நீண்டகால சிறைவாசம் அனுபவித்து வருவோர் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து ஜனாதிபதி அறிக்கை ஒன்றை கோரவேண்டும். ஜனாதிபதி விரும்பினால் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கமுடியும். முன்னாள் பயங்கரவாதிகளுக்கு முன்னைய ஜனாதிபதிகள் மன்னிப்பு வழங்கிய சந்தர்ப்பங்கள் உண்டு என்று சட்டநிபுணரான ராஜபக்ஸ விளக்கமளித்திருக்கிறார். வடக்கில் பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவம் கையகப்படுத்திய குடிமக்களின் காணிகளை விடுவிப்பதற்கும் தனது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று ஜனாதிபதி திஸநாயக்க வழங்கிய வாக்குறுதி தொடர்பில் கருத்துத் தெரிவித்த ராஜபக்ஸ அந்த விவகாரம் குறித்து பாதுகாப்பு அமைச்சே நிலவரத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறினார்.
அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்று ஜனாதிபதி திஸநாயக்க மாத்திரமல்ல, ஜே. வி. பி. தேசிய மக்கள் சக்தியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிமல் ரத்நாயக்கவும்கூட வவுனியாவில் கடந்த மாதம் கூறியிருந்தார். இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லை என்று விஜயதாஸ ராஜபக்ஸ மாத்திரமல்லர், வேறுபல தென்னிலங்கை அரசியல்வாதிகளும் அவ்வப் போது கூறியிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்னர் (2021ஆம் ஆண்டு என்று நினைவு ) இலங்கையில் உள்ள ‘அரசியல் கைதிகளின்’ எண்ணிக்கை தொடர்பாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுபப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சபையில் கேள்வியெழுப்பியபோது அன்றைய நீதியமைச்சர் அலி சப்ரி இலங்கை சிறைகளில் அரசியல் காரணங்களுக்காக எவரும் அடைத்து வைக்கப்பட்டிருக்கவில்லை என்று பதிலளித்தார். இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லை என்று இரு முன்னாள் நீதியமைச்சர்கள் எந்த அடிப்படையில் கூறினார்கள்? அரசியல் கைதிகள் என்ற பதத்துக்கு அவர்கள் கூறும் வரைவிலக்கணம் என்ன? என்ற கேள்விகள் குறித்து ஆராய்வதற்கு இங்கு இடவசதிபோதாது. ஆனால், வடக்கில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளுக்கு உடனடியாகவே விஜயதாஸ ராஜபக்ஸ எதிர்வினையாற்றியமையை நோக்குவதே முக்கியமானது.
தேசிய இனப்பிரச்னைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி திஸநாயக்கவிடமிருந்தோ அல்லது தேசிய மக்கள் சக்தியிடமிருந்தோ நேர்மறையான சமிக்ஞை எதுவும் வராமல் இருப்பது குறித்து தமிழ் மக்கள் விசனமடைந்திருக்கும் நிலையில், அவர்களின் மனக்குறைகளை போக்குவதற்கு ஜனாதிபதியால் எடுக்கப்படக்கூடிய எந்தவொரு சிறிய நடவடிக்கையையும்கூட உடனடியாகவே எதிர்ப்பதற்கும் அது தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்குவதற்கும் தென்னிலங்கையில் அரசியல் வாதிகள் ‘ஆவலுடன்’ காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது பிரகாசமாகத் தெரிகிறது.