இந்தியாவின் பெங்களூரு, கோரமங்கலம் உள்ளக விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (18) தொடங்கிய 13ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் ஏ குழுவில் இடம்பெறும் நடப்பு சம்பியன் இலங்கை தனது முதலாவது போட்டியில் வெற்றியீட்டியது.
பிலிப்பைன்ஸுக்கு எதிராக நடைபெற்ற அப் போட்டியில் சிறு சவாலுக்கு மத்தியில் இலங்கை 73 – 44 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலாவது கால் மணி நேர ஆட்டத்தில் வேகமாகவும் சிறந்த வியூகங்களுடனும் விளையாடிய இலங்கை 24 – 8 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை அடைந்தது.
இரண்டாவது கால் மணி நேர ஆட்டத்தில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்த இலங்கை அப் பகுதியையும் 19 – 9 என தனதாக்கியது. இதற்கு அமைய இடைவேளையின்போது இலங்கை 43 – 17 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.
இடைவேளைக்குப் பின்னர் 3ஆவது கால் மணி நேர ஆட்டத்தில் அணித் தலைவி துலிங்கி வன்னித்திலக்க, முன்னாள் தலைவிகளான கயனி திசாநாயக்க மற்றும் கயஞ்சிலி அமரவன்ச, கோல் நிலை வீராங்கனை திசலா அல்கம ஆகியோருக்கு அணி பயிற்றுநர் நாலிகா பிரசாதி ஓய்வு கொடுத்தார்.
இதனை சாதகமாக்கிக்கொண்ட பிலிப்பைன்ஸ் 3ஆவது ஆட்ட நேர பகுதியை 17 – 13 என தனதாக்கிக்கொண்டது. ஓய்வு கொடுக்கப்பட்ட வீராங்கனைகள் மீண்டும் 4ஆவது கால் மணி நேர ஆட்டத்தில் விளையாடியதை அடுத்து இலங்கை அப் பகுதியை 17 – 10 என தனதாக்கிக்கொண்டது.
இதற்கு அமைய ஒட்டுமொத்த கோல்கள் நிலையில் 73 – 44 என இலங்கை வெற்றியீட்டியது. திசலா அல்கம 48 முயற்சிகளில் 47 கோல்களையும் ரஷ்மி பெரேரா 22 முயற்சிகளில் 20 கோல்களையும் ஹசித்தா மெண்டிஸ் 9 முயற்சிகளில் 6 கோல்களையும் போட்டனர்.
இலங்கை தனது இரண்டாவது போட்டியில் சவூதி அரேபியாவை சனிக்கிழமை (19) எதிர்த்தாடவுள்ளது. இது இவ்வாறிருக்க, இலங்கை வலைபந்தாட்ட அணியினருக்கு இந்தியர் ஒருவரின் உப அனுசரணையை இலங்கையின் முன்னாள் வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் பெற்றுக்கொடுத்துள்ளார்.