28 C
Colombo
Wednesday, August 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நாதஸ்வர இசையை லயித்தவாறு இவ்வுலக வாழ்வை நீத்த தந்தை செல்வா!

-அலசுவது இராஜதந்திரி-

தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தின் 44ஆவது சிரார்த்ததினம் யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

44 வருடங்களுக்கு முன்னர் தந்தை எஸ். ஜே. வி. செல்வநாயகம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நரம்பியல் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அச்சமயம் தமது இறுதி மூச்சை தந்தை செல்வா சுவாசித்துக் கொண்டிருந்த சமயம், அவருக்கு சிகிச்சையளித்த நரம்பியல் நிபுணர்கள், தந்தை செல்வாவின் பாரியாரிடம் அவரது கணவருக்குப் பிடித்தமான இசை எது? என்று கேட்டிருந்தனராம். அச்சமயம் திருமதி செல்வநாயகம், தந்தை செல்வாவுக்கு நாதஸ்வர இசை என்றால் அலாதியான பிரியம் என்று கூறியிருந்தார்.

அப்போது தந்தை செல்வாவின் மருத்துவர்கள், வாழ்வின் இறுதிக் கட்டத்தை  தந்தை செல்வா நெருங்கிவிட்டதை செல்வாவின் பாரியாரிடம் பவ்வியமாக எடுத்துக்கூறி, தந்தைக்குப் பிடித்தமான நாதஸ்வர இசையை அவரது படுக்கையருகே ஒலிக்கச் செய்யும்படி கேட்டுக்கொண்டனராம்.

அப்போது நாதஸ்வர இசையை அவரது படுக்கைக்கு அருகே ஒலிக்கச்செய்த நிலையில், சில மணி நேரத்தில் அந்த இசையில் லயித்தவாறே தந்தையின் உயிர் பிரிந்தது.

காந்தியவாதி  

பிறப்பால் ஓர் அங்லிக்கன் கிறிஸ்தவரானபோதிலும் வடக்கு – கிழக்கின் பெரும்பான்மை இந்துக்களால் மடடுமல்ல. அப்போது தமிழ் அரசியலில் தம்மையும் பெரிதும் இணைத்துக்கொண்டிருந்த முஸ்லிம் மக்களாலும்  போற்றப்பட்டவரே தந்தை செல்வா என்பது குறிப்பிடத்தக்கது. காந்தியடிகளின் சாத்வீக கொள்கையை பின்பற்றியவராக, தமிழரின் அரசியல் போராட்டத்துக்கு அடித்தளமிட்டிருந்தார் தந்தை எஸ். ஜே. வி. செல்வநாயகம். ஆயினும், தென்னிலங்கையின் பேரினவாத சக்திகள் தமது அடக்குமுறைப் போக்கையே எப்போதும் கொண்டிருந்தனர்.

அரசியலில் தமக்கென ஒரு தனித்துவமான போக்கை வன்முறையற்றதாக கொண்டிருந்நத தந்தை செல்வா, எவரையும் நோகடிக்கும் பாங்கில் நடந்துகொண்டிராத அதேசமயம், தமது கொள்கைகளில் மிக உறுதியானவராக இருந்தார்.

தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்ல, தென்னிலங்கை அரசியல்வாதிகளும் மதித்துப் பொற்றும் விதத்தில் தந்தை செல்வாவின் அரசியல் நடவடிக்கைகள் விளங்கியிருந்தன.

கொழும்பு கல்கிசை சென். தோமஸ் கல்லூரியில் கல்வி பயின்ற தந்தை செல்வநாயகம், அக் கல்லூரியிலேயே பின்னாளில் அரசியலில் தமக்கு சவால் விட்டிருந்த எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்காவின் பாடசாலை சகாவாகவுமிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை செல்வாவும், பண்டாரநாயக்காவும் அங்கிலிக்கன் கிறிஸ்தவ மதத்தவர்கள். இருந்தபோதிலும் பெரும்பான்மை சிங்கள-பௌத்த மக்களது ஆதரவைப்பெறும் விதத்தில் எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா பௌத்த மதத்தை தழுவியிருந்தார்.

நேர்மையான கிறிஸ்தவர்ஆனால், இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த வடக்கு-கிழக்கு மாகாணங்களில் அரசியலுக்காக தமது மதத்தை மாற்றிக்கொள்ளாதவராக தந்தை செல்வா விளங்கியிருந்தார். அத்துடன், அவர் பிரதிநிதித்துவம்செய்த காங்கேசன்துறை தொகுதி, இந்துக்களை பெரும்பான்மையாக கொண்டிருந்தது. ஆயினும் அவரது பரந்தநோக்கு காந்தியத்தை அடிப்படையாகக்கொண்ட வாழ்க்கைமுறை என்பவை அவரை ஒர் உத்தம அரசியலாளர் என்பதையே வெளிப்படுத்தியிருந்தது.

ஒரு மதப்பற்றுமிக்க அங்கிலிக்கன் கிறிஸ்தவராக விளங்கிய போதிலும், இந்து கலாசாரத்தையும், காநாடக இசையையும் நேசிக்கின்ற ஒரு கலா ரசிகனாகவும் தந்தை செல்வா விளங்கியிருந்தார்.

பத்திரிகையாளர் இரா. பத்மநாதன்‘வீரகேசரி’யைச்சேர்ந்த காலஞ்சென்ற பிரபல பத்திரிகையாளர் இரா. பத்மநாதன் தந்தை செல்வாவுடன் மிக நெருங்கிப்பழகியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தடவை தந்தை செல்வாவின் கலாரசனை பற்றிக்குறிப்பிடும்போது, ‘கொழும்பில் அக்காலத்தில் களைகட்டியிருந்த ஆடி வேல் விழாவில் பிரபல தென்னிந்திய நாதஸ்வர வித்துவான்கள் இசைக் கச்சேரிகளை நடத்தியிருந்தனர்.

அப்போது தம்மை யாரென்று காட்டிக்கொள்ளாது  நாதஸ்வர இசைச்கச்சேரிகளை அமைதியாக ஒரு புறத்தேயிருந்து  ரசித்துக்கொண்டிருப்பதை தந்தை செல்வா வழக்கமாக கொண்டிருந்தார்’ என்று குறிப்பிட்டிருந்நதார்.

எப்போதுமே எளிமையான வாழ்க்கைமுறையை பின்பற்றிய தந்தை செல்வா, அக்காலத்தில் கொழும்பிலிருந்து ரயில்வண்டி மூலமாக தமது இல்லம் அமைந்திருந்த தெல்லிப்பழையை வந்தடைந்து, ரயில் நிலையத்திலிருந்து தமது இல்லத்துக்கு தமது பயணப் பொதியை தாமே சுமந்து கால்நடையாகச்செல்வார்.

அச்சமயம், பலர் தமது மோட்டார் வண்டிகளில் வருமாறு கேட்டுக்கொண்டாலும் தந்தை செல்வா நன்றி உணர்வோடு  அவர்களது வேண்டுதலை மறுத்து கால் நடையாகவே தமது இல்லம் நோக்கிச்செல்வாராம்.

தமது தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்விலும் ஒரு நேர்மையாளராகவே வாழ்ந்த தந்தை செல்வா, கடும்போக்கான தென்னிலங்கை அரசியல்வாதிகளிடமிருந்து இலங்கைத் தமிழர்களை ‘கடவுள் தான் இனி காப்பாற்ற வேண்டும்’ என்று ஒரு தடவை குறிப்பிட்டிருந்தார். அவர் தீர்க்கதரிசனத்ததோடு குறிப்பிட்ட இக்கூற்று, இன்றுவரை மிகப்பொருத்தமான தொன்றாகவே இருக்கின்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles