சுகாதார அமைச்சில் கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மருந்து கொள்வனவு மோசடிகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு விசாரணைக்கும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க நான் தயார் என முன்னாள் சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்தார்.
மருந்து மோசடிகள் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக வியாழக்கிழமை (21) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வருகை தந்த போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மருந்து கொள்வனவு மோசடிகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு விசாரணைக்கும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க நான் தயாராக இருக்கின்றேன். அமைச்சரவை தீர்மானங்கள் வெ வ்வேறு அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய நிதி அமைச்சின் அங்கீகாரத்துடனேயே எடுக்கப்படுகின்றன.
எனவே இவை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் எமது தரப்பில் பிரச்சினைகள் இல்லை. எவ்வாறிருப்பினும் நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் அவற்றுக்கு ஒத்துழைப்பதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம்.
உற்பத்தியின் போது மருந்து பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. அவை தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே நான் இங்கு முன்னிலையாகியிருக்கின்றேன். புதிய சுகாதார அமைச்சர் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகின்றேன் என்றார்.