ஒரு சில நீதிபதிகளின் முறையற்ற செயற்பாடுகளினால் கௌரவமாக செயற்படும் பெரும்பாலான நீதிபதிகளின் புகழுக்கும் இழுக்கு ஏற்பட்டுள்ளது. நீதிச்சேவை கட்டமைப்பு பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளன. சபையில் நான் ஆற்றிய உரை தொடர்பில் ஊடக அறிக்கை வெளியிட்ட இரு நீதிபதிகளை தேவையாயின் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கவியல் குழுவுக்கு அழையுங்கள் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் உரையாற்றியதாவது,
நீதிச்சேவை கட்டமைப்பு குறித்து நான் ஆற்றிய உரை தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டிருந்தேன்.நான் கேள்விகளை முன்வைப்பதற்கு முன்னர் நீதிச்சேவை ஆணைக்குழு அதற்கு பதிலளித்துள்ளதற்கு மகிழ்ச்சியடைகிறேன்.
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடந்த மாதம் 19 ஆம் திகதி நீதிமன்ற கட்டமைப்பு குறித்து முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் நான் பல விடயங்களை குறிப்பிட்டேன். பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதிச்சேவைகள் குறித்து நீதிமன்றத்திடம் கேட்க முடியாத விடயங்களை நீதியமைச்சரான என்னிடமே கேட்கிறார்கள்.நான் அதற்கு பதிலளித்தேன்.
கல்கிசை நீதிமன்றத்தின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு சட்டவிரோதமான முறையில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் பெற்றுக் கொண்ட நீதிபதி தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன. இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தினேன்.ஆனால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு பொருளாக வைக்கப்பட்டிருந்த 20 கோடி பெறுமதியான விஸ்கி போத்தல்கள் காணாமல் போனமை தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப் பெற்றன. நீதிமன்றத்தின் களஞ்சியசாலையின் கதவின் பூட்டை உடைத்து போத்தல்கள் திருடப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.ஆனால் பூட்டுக்கு பொருத்தமான வழமையான திறப்பினை கொண்டு கதவு திறக்கப்பட்டுள்ளதாக அரச பகுப்பாய்வாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
விஸ்கி போத்தல்கள் திருடப்பட்ட விவகாரத்தை மூடி மறைக்க நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் முயற்சிப்பதாக ஆணைக்குழுவின் பெரும்பாலானவர்கள் குறிப்பிடுகிறார்கள். இவ்விடயத்தை நான் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டதன் பின்னர் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு.பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஹெரோயின்,கஞ்சா , ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் தண்டனை பற்றி குறிப்பிடப்பட்டது.அபாயகரமான போதைப்பொருட்களுக்கு 1000 ரூபா தண்டப்பணம் அல்லது பகல் 2 அல்லது 3 மணிக்கு பின்னர் விடுதலை என்ற நிலை காணப்பட்டது. கல்கிசை நீதிமன்றத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் நீர் மற்றும் மின்சாரத்தை பெற்றுக்கொண்ட நீதிபதி தான் இவ்விவகாரத்திலும் தொடர்புப்பட்டுள்ளார்.
ஒருசிலரது முறையற்ற செயற்பாடுகளினால் கௌரமாக செயற்படும் நீதிபதிகளின் புகழுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் தான் நான் இவ்விடயங்களை பாராளுமன்றத்தில் குறிப்பிட்டேன்.எனது உரைக்கு எதிராக நீதிச்சேவை சங்கத்தின் தலைவரான நீதிபதி ருவன் திஸாநாயக்க, செயலாளர் இசுறு நித்திகுமார ஆகியோர் எனக்கு எதிராக ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
2010 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி வெளியிடப்பட்ட 328 இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம் நீதிமன்ற சேவைகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது வெளி தரப்பினர்கள அவ்விடயம் தொடர்பில் தமது தனிப்பட்ட நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தினதும்இநீதிபதிகளினதும் சுயாதீனத்துக்காக நான் குரல் கொடுத்துள்ளேன்.இதனை எதிர்க்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். பாராளுமன்றத்தில் நான் குறிப்பிட்ட விடயங்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட இரண்டு நீதிபதிகளை பாராளுமன்ற சிறப்புரிமைகள் தொடர்பான குழுவுக்கு அழையுங்கள் என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
இவ்விடயம் குறித்து நீதிச்சேவைகள் ஆணைக்குழு பரிசீலனை அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ளது.ஆகவே அவசியமாயின் இவ்விரு நீதிபதிகளையும் சிறப்புரிமை குழுவுக்கு அழையுங்கள் என வலியுறுத்தினார்.