30 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழ். நகரில் ஜனாதிபதி அநுர விட்டுச் சென்ற செய்தி

ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க நேற்றையதினம் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரத்துக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தார். யாழ். நகரில் அவர் உரையாற்றிய பிரசாரக் கூட்டத்தில் வடக்குக்கு வெளியில் இருந்து பல பஸ்களில் கூட்டிவரப்பட்ட மக்களும் கலந்து கொண்டனரெனக் கூறப்படுகிறது.

நாட்டின் ஜனாதிபதி கலந்து கொள்ளும் கூட்டத்தில் சொற்ப எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டால் மதிப்பாக இருக்காது என்பதால் தேசிய மக்கள் சக்தியின் செயல்பாட்டாளர்கள் வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வந்திருக்கலாம். பணம் கொடுத்துத்தான் அவர்களை அழைத்து வந்தார்களோ தெரியாது. ஜனாதிபதி தேர்தலில் திஸநாயக்கவின் பிரசாரக்கூட்டங்களில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டார்கள். அந்தக் கூட்டங்களுக்குக்கூட பணமும் உணவும் கொடுத்து வெளியிடங்களில் இருந்து மக்கள் பஸ்களில் ஏற்றியிறக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களும் உண்டு. தேர்தல் அரசியல் என்று வந்துவிட்டால் ‘இது எல்லாம் சகஜமப்பா…’ என்றாகிவிட்ட நிலையில் அதுவும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிட்டால் கேட்கவா வேண்டும்.

ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அதுவும் குறிப்பாக தேசிய மக்கள் சக்தியின் தலைமைக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே. வி. பி.)வின் அரசியல்வாதிகள் இனப்பிரச்னைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் மேலும் குறிப்பாக அரசமைப்புக் கான 13ஆவது திருத்தம் தொடர்பில் எதிர்மறையான கருத்துகளை அண்மைய நாட்களில் வெளியிட்டுவந்த பின்புலத்தில் முதல் தடவையாக யாழ்ப்பாணத்துக்கு வந்த திஸநாயக்க அரசியல் தீர்வு குறித்து ஏதாவது கூறுவார் என்று எதிர்பார்த் தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. யாழ்ப்பாண மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களும் தங்க ளுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதற்கு மனங்கொள்வதற்கு வசதியாக தங்கள் தலைவர் அரசியல் தீர்வு தொடர்பில் சில உறுதிமொழிகளை வழங்கினால் நன்றாக இருக்கும் என்று நிச்சயமாக எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால், ஜனாதிபதி அதைப்பற்றி எதையும் கூறாமல் இருப்பதில் மிகவும் ‘கவனமாக’ நடந்துகொண்டதை காணக்கூடியதாக இருந்தது. 2015 – 2019 ‘நல் லாட்சி’ அரசாங்க காலத்தில் தொடங்கப்பட்ட அரசமைப்பு வரைவு செயன்முறைகளை தொடர்ந்து முன்னெடுத்து நிறைவுசெய்து அதன் மூலமாக புதிய அரசமைப்பை கொண்டுவந்து தேசிய இனப்பிரச்னை உட்பட நாடு எதிர்நோக்கும் முக்கியமான சகல பிரச்னைகளுக்கும் தீர்வைக் காணப்போவதாக ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாப னத்தில் எழுத்தில் வழங்கிய வாக்குறுதியைக்கூட யாழ்ப்பாணத்தில் திருப்பி ஒப்பு விக்கவில்லை.

பதிலாக, அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் பாதுகாப்பு தேவைக்காக இராணுவத்தினர் வசமிருக்கும் பொதுமக்களின் காணிகளை விடுவிக்கப் போவதாகவும் மாத்திரம் வெளியில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் உட்பட கூட்டத்தில் இருந்தவர்களுக்கு உறுதியளித்தார். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைத்ததும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களுடன் பேச்சுகளை நடத்தி தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு முயற்சி எடுப்போம் என்று ஒரு சாட்டுக்கேனும் கூறுவதற்கு அவர் விரும்பவில்லை. ஆனால், ஜனாதிபதி திஸநாயக்கவின் அரசாங்கத்தின் ஒரேயோர் அமைச்சரான விஜித ஹேரத் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றும் என்ற உறுதியான நம்பிக்கை தங்களுக்கு இருப்பதா கவும் தேசிய ஐக்கியத்தை சாதிப்பதற்காக தமிழ், முஸ்லிம் மக்களினால் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டு தேசிய ஐக்கிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்போவதாக கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் நேற்றைய தினம் கூறியிருக்கிறார். ஆனால், தேசிய இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது குறித்து எதையும் அவர் கூறவில்லை. தென்னிலங்கையில் தாங்கள் ஏற்படுத்தி வருவதாகக் கூறும் மாற்றத்துக்குள் சிறுபான்மைசு சமூகங்களின் குறிப்பாக தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடியதாக எந்த சிந்தனையையும் உள்ளடக்குவதில் நாட்டம் இருப்பதாக ஜனாதிபதியோ தேசிய மக்கள் சக்தியோ எந்த அறிகுறியையும் இதுவரையில் காண்பிக்கவில்லை.

சிறுபான்மை சமூகங்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்ட தென்னிலங்கை அரசியல் சக்திகளை பகைத்துக்கொள்ளாத வழமையான அணுகுமுறையை கடைப்பிடிப்பதிலேயே ‘புதிய அரசியல் கலாசாரம்’ பற்றி பேசும் இவர்களும் அக்கறையாக இருக்கிறார்கள். இதுவே யாழ்ப்பாணம் வந்து திஸநாயக்க விட்டுச் சென்ற செய்தி. தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதில் நாட்டம் கொண்ட தமிழ் வாக்காளர்கள் சிந்தித்துப் பார்த்து தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துவார்களாக!

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles