மறைந்த இரா. சம்பந்தனுக்கு சபையில் ஜனாதிபதி மட்டுமா அனுதாபம் தெரிவிக்க முடியும். எதிர்க்கட்சித் தலைவருக்கு அந்த சந்தர்ப்பம் இல்லையா என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேதமாச சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபே வர்தன தலைமையில் கூடியது. இதனையடுத்து சபாநாயகர் அறிவிப்பு, ஜனாதிபதி உரை என்பன இடம்பெற்றன .
இதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உரையை நிறைவு செய்த பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலமான இலங்கை தமிழரசுக்கட்சியின் பெரும் தலைவரான இரா.சம்பந்தனுக்கு அனுதாபம் தெரிவித்து உரையாற்றினார்.
இதனையடுத்து எழுந்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இரா.சம்பந்தனுக்கு தானும் அனுதாபம் தெரிவித்து உரையாற்ற முற்பட்டபோது அதற்கு சபாநாயகர் அனுமதி வழங்க மறுத்து விட்டார்.
இதன்போதே மறைந்த இரா. சம்பந்தனுக்கு சபையில் ஜனாதிபதி மட்டுமா அனுதாபம் தெரிவிக்க முடியும்? எதிர்கட்சித்தலைவரான என்னால் அனுதாபம் தெரிவிக்க முடியாதா?ஜனாதிபதிக்கு ஒரு கவனிப்பு, எமக்கு ஒரு கவனிப்பா என சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார் .
அதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில், இரா.சம்பந்தனுக்கு இன்று அனுதாபம் தெரிவித்து பேசமுடியாது. அதற்கு ஒரு நாள் ஒதுக்கப்படும் அன்று நீங்கள் பேச முடியும் என்றார்.
அப்படியானால் இன்று ஏன் ஜனாதிபதிக்கு அனுமதி கொடுத்தீர்கள் எனக்கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனுக்காக நாம் ஒரு பிரேரணை கொண்டு வந்து உரையாற்றுவோம் என்றார்.
அதனையடுத்து சபாநாயகர், சரி, இறுதியில் உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன் எனக்கூறிய சபாநாயகர், பிரதான நடவடிக்கைகள் முடிந்த பின்னர் இரா.சம்பந்தனுக்கு அனுதாபம் தெரிவிக்க எதிர்கட்சித்தலைவருக்கு அனுமதி வழங்கினார்.